கண்ணன் பாட்டு:
பாரதியின் கவிதைகளிலேயே என்னை மிகவும் கவர்ந்தது இந்த கண்ணன் பாட்டு என்பேன். கண்ணனை தோழனாக, அரசனாக, மகளாக, காதலனாக, காதலியாக பாவித்து பாரதி புனைந்த அற்புதம் அது.
அவற்றுள் சில வரிகள் என்னை வெகுவாகக்கவர்ந்தன:
கண்ணன் என் தோழன்:
பொன்னவிர் மேனி சுபத்திரை மாதை புறங்கொண்டு போவதற்கே இனி என்ன வழி எனக்கேட்கில் உபாயம் இருகணத்தே உரைப்பான்.
இதில் இரு கணம் என்பதை கூர்ந்து நோக்குக. அடுத்த வரி:
அந்த கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட காணும் வழி ஒன்றில்லேன் வந்திங்கு உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒருகணத்தே உரைப்பான்.
அந்த உபாயத்திற்கு இரு கணம். இதற்கு ஒரே கணம் தான்!!!! போர் கண்ணனுக்கு எவ்வளவு எளிது என்பதை இந்த நுணுக்கதிலிருந்து அறிய வைக்கிறார் பாரதி.
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண்மகிழ் சித்திரத்தில் பகை மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் கான்.
இதில் கண்ணனின் பூரணத்வம் எளிமையாக கூறப்பட்டுள்ளது. செய்யும் அனைத்திலும் வெற்றி......
கண்ணன் என் தந்தை:
இதில் கண்ணனை இன்பமாக இகழ்கிறார் பாரதி.
செல்வத்திர்கோர் குறை இல்லை, எந்தை சேமித்து வைத்த பொன்னுக்கு அளவொன்றில்லை.
கல்வியில் மிகச்சிரந்தோன், அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கிலில்லை.
பல்வகை மான்பினிடையே கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு.
நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு.
முதலில் படித்த போது இது ஒரு வஞ்சப்புகழ்ச்சியாக, தனிச்சுவையாக இருந்த வரி. எண்ணி எண்ணி ரசித்தேன்.
கண்ணன் என் சேவகன்:
இதைக்கேளுங்கள்....
கூலி மிகக்கேட்பார், கொடுத்தெல்லாம் தாம் மறப்பார்.
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்.
ஏனடா நேற்றைக்கு நீ இங்கு வரவில்லை? என்றால்...
பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்தது என்பார்.
வீட்டில் பெண்டாட்டி மேல் பூதம் வந்தது என்பார்.
இப்படியாக நகைச்சுவையுடன் கூடிய பல்சுவை மிகுந்த வரிகள் கண்ணன் பாட்டினில் காணலாம்.
கண்ணன் என் அரசன்:
இதில் கண்ணனில் நையாண்டி செய்து பின்பு உச்சியில் ஏற்றுவார் பாரதி.
முதல் சில வரிகளில்....
பகைமை முற்றி முதிர்ந்திடும் மட்டிலும் பார்த்திருப்பதல்லால் ஒன்றும் செய்திடான்.
நகை புரிந்து பொருத்து பொருத்தையோ நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்.
இடையன் வீரமில்லாதவன் அஞ்சினோன் என்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான்.....
என்பன போல் சொல்லிவிட்டு...
பிற்பகுதியில்....
காலம் வந்து கை கூடுமப்போதிலோர் கணத்திலே புதிதாக விளங்குவான்.
ஆலகால விடத்தினை போலவே அகிலமுற்றும் அசைந்திடச்சீருவான்....
என்று நெகிழச்செய்கிறார் பாரதி.
இன்னும் பல்சுவை கொண்ட பாரதியின் கவிதைச்சாரினை பருகி இன்புறுக.
No comments:
Post a Comment