Saturday, September 4, 2010

Tamizhkaar


தமிழக்கார்காலம்:
கார்காலம் என்றுமே அழகு தான். இந்த எளிய தொடக்கத்தை மழை விரும்பிகள் விரும்ப மாட்டார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் மழையின் அழகு புலவர்களின் திறனையே வற்ற வைத்திருக்கிறது. நான் புலவன் அல்லவே.
தமிழ் நாட்டில் நிலங்களை ஐவகையாக பிரித்திருந்தனர். குறுஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை. இந்த ஐவகை நிலங்களும் பண்டை தமிழகத்தில் கார் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு நாள் விட்டத்தை பார்த்தபடி எண்ணியிருந்தேன். பண்டை தமிழனின் மூளைக்குள் குடிபுகுந்து அவனுடைய கண் ஜன்னல்களில் வாயிலாக பண்டை தமிழகத்தை எட்டி பார்க்க வேண்டும் போலிருந்தது. அப்பொழுதும் வெளியில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. திருக்கோவிலூரில் உள்ள என் வீட்டின் பெட்ரூமில் அமர்ந்து கொண்டு, சூடான காபியை குடித்துகொண்டே என் கற்பனை குதிரையை காலச்சக்கரத்தில் பின்னோக்கி ஒடச்செய்தேன். மூளைக்குள்ளிருக்கும் எந்த பொருளுக்குமே விதிகள் இல்லையே. குதிரை பெரிதாக சிரமப்படவில்லை.

இடம் : கொல்லி மலைச்சாரல்
காலம்: கார்
நேரம்:  வைகறை

அப்பொழுதே விட்டிருந்த மழையின் தாக்கம் இன்னும் அந்த மலைகளில் காணப்பட்டன. மரங்களில் ஈரம் இன்னும் உலரவில்லை. பறந்து விரிந்த அந்த ஆலமரத்தின் இலைகள் இன்னும் மழை நீரை சொட்டவிட்டு கொண்டிருந்தன.

மழை காலங்களில் எல்லா உயிர்களும் தேடும் ஒரு பொருள், அடைக்கலம்.

மனிதன் தோன்றும் முன்னரே அந்த மலைகளில் ஆதிக்கம் செலுத்திய குரங்கினங்கள் மலைக்குகைகளில் தஞ்சம் புகுந்திருந்தன. குகைகளின் வெப்பமும் வெளியில் உள்ள மழையும் என்ன ஒரு இதமான கலவை அவைகளுக்கு. செழித்து வளர்ந்த மலைக்காடுகளில் உணவுக்கோர் பஞ்சமில்லை. மரங்களை சொந்தம் கொள்வோர் எவருமில்லை. இயற்கை அமைத்து தந்த அந்த வீடுகளில் தங்கள் வாழும் கடமையை நிவர்த்தி செய்ய தடைகளும் ஒன்றுமில்லை. எங்கும் இன்பமயம்.

மலைச்சாரலில் அந்த சிற்றூர் இன்னும் துயிலெழவில்லை. ஆதவன் புவியின் விளிம்பில் எட்டிப்பார்த்த பொழுது, மலையுலகம் சப்தமின்றி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அந்த உறக்கம், புணர்ச்சி இன்பத்தின் நீட்டிப்பு என்பதை ஆதவன் உணர்ந்திருந்தான் போலும். வழக்கத்திற்கு மாறாக மெல்ல உதிக்கலாணன். கதிரவனின் வெளிச்சம் படவே மெல்ல தேனீக்களின் ரீங்காரம் தொடங்கியது. காலை மணி அடித்தாற்போல மற்ற உயிர்கள் துயிலெழுந்து சோம்பல் முறித்தன. ஈரவாசதால் ஒரு புத்துணர்வு படலத்தை உலகக்கன்னியின் மீது போர்த்தினான் வருணன்.. வெட்கி தலை குனிந்தாள் அவள்... அந்த வெட்கத்தால் சிவப்பேறிய கன்னங்களை போல் இருந்தது இந்த குறிஞ்சி நிலப்பகுதி.

உயிரோட்டத்தின் மூலமே நீரோட்டம் தான்... அம்மலை உச்சியில் விழுந்து, பாறைகளில் மோதி தெறித்து, பல ஜீவாராசிகளின் உயிரை எழுப்பி, அவைகளின் சிற்றுடலின் தாகம் தனித்தது புதுமழை..
என்றோ விழுந்து மண்ணை போர்த்து  உறங்கி கொண்டிருந்த விதைகள், ஒரு நாள் மழை நீரில் ஊறியதால் சட்டென்று முளைத்து வானை பார்த்து வெகுளியை சிரித்தன..

நீருக்கு நிறமில்லை என்பது உண்மை தான்... ஆனால் மழைக்கு நிறமுண்டு...பச்சை... உயிரின் நிறமும் அதுவாகத்தான் இருக்கவேண்டும்...மொத்தமாய் உலகத்தையே நீராட்டும் மழைத்தாய் பச்சை ஆடை போட்டு அழகு பார்க்கிறாள்..

எங்கெங்கோ விழுந்து மண்ணுடன் கலந்து தழுவி ஓரிடத்தில் கூடி செந்நிற சிற்றோடையாக அந்த சிற்றூருக்குள் வந்தது புது நீர்.. குறமகளிர், புதிய நீர் தோய்ந்த ஈர மண்ணில் கால் வைத்ததால், தங்களின் தண்டுவடத்தில் பாய்ந்த சீதள மின்சாரத்தில் மேலும் மெருகேறி அழகு மிளிர்ந்த முகங்களுடன் தங்கள் தலைவனை துயில் எழுப்பினர்.

புதிய உலகம் கிடைத்த களிப்பின் மிகுதியை தத்தம் தலைவியருடன் ஜீரணித்து கொண்டிருந்தனர் குரவர்கள்.. இன்பத்தின் உச்சி எப்படி இருக்கும் என்பதை அறியத்தொடங்கினர் அவர்கள்.. தேனும் மலைக்கனிகளும் பலா மரங்களும் காத்துக்கொண்டிருந்தன அவர்களுக்கு விருந்தளிக்க.. இன்பம் என்னும் உலக உணர்விற்கு அப்பால் இருக்கும் விஷயங்களை சிந்திக்க வேண்டிய சூழ்நிலையை அமைத்து கொடுத்த மழைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர் சிந்தனையாளர்கள்... ஊர் என்று ஒன்று இருந்தால் அங்கு சிந்தனைகளும் இருக்கத்தான் வேண்டும்... ஊர்க்கோடியில் கட்டியிருந்த முருகன் கோவிலில் "இன்பத்திற்கு பின்?" என்ற கேள்விக்கு விடை தேடி சென்றார்கள்...
( குறிஞ்சி நிலம் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்ற உரிப்பொருளுக்கே உகந்தது.. அதனால் இன்பத்தை தலையான உணர்வாக வைத்து கற்பனை செய்து பார்த்தேன் )
குறிஞ்சி முற்றும்.

No comments:

Post a Comment