சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் கார் என்று பண்டைய தமிழ் நாட்டில் குறிஞ்சி நிலப்பகுதி கார் காலம் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை புனைப்பை பதிவிட்டிருந்தேன். என் நண்பனும் நலன் விரும்பியுமான தஞ்சை விக்ரமன் அதனை சமீபத்தில் நினைவூட்ட, தற்போது மீண்டும் அவ்வரிசையில் மற்ற நிலங்களில் கார் காலம் எப்படி இருக்கும் என்ற பதிவுகளை வெளியிடுவதாக சித்தம்.
இது கற்பனை என்பதனால் சரி தவறு என்று ஏதும் இருக்க இயலாது என்று கருதுகிறேன். உரிப்பொருட்களில் அல்லது கருத்துகளில் வேற்றுமை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்.
வணக்கம்.
சுரேந்தர்.
முல்லை.
காலம் கி மு 2௦௦௦
காடுகள் வாயிலாக, இயற்கை பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த அந்த அந்தி நேரம். ஓயாமல் பெய்த கணமழை, மண்ணூரி வேர்களின் இடுக்குகளில் வழி தேடி சொட்டு சொட்டாக சேர்ந்து சிற்றோடையாக உருவெடுத்து சலசலக்கத்தொடங்கும் பெருநிகழ்ச்சியை இயற்கை அமைதியாக அரங்கேற்றிக்கொண்டிருந்தாள். காலப்பெருவெள்ளத்தின் சிறு துளியின் ஆயிரமாவது பங்கின் ஒரு பகுதியான இந்த தருணத்தின் கணத்தை தலைவன் ஒரு கனம் வியந்து நினைந்து நனைந்து நடந்துகொண்டிருந்தான் மனையை நோக்கி.
காடு அவர்களுக்கு ஒரு உயிர் வடிவம். உணவூட்டும் தாயாகி, அனுபவம் புகட்டும் தந்தையாகி, தனிமையில் நடக்கும் பொழுது உற்ற நண்பனாகி, பச்சிலைகளை போர்த்து நதிகளை தன்னுடலினூடே பாய்ச்சி பலவண்ண ஒப்பனைகளை மலர்களால் தினம் சூடும் காதலியாகவும், ஸ்வாசமூட்டும் கடவுளாகவும் இருக்கும் காடு அவர்களுக்கு வாழ்வில் இரண்டறக்கலந்த ஒன்று.
அடர்ந்த காட்டிற்கு வெளியில் ஒரு திறந்த நிலப்பகுதியில் உள்ள ஊர் அந்தி காலத்தை இனிதே வரவேற்றது. ஆங்காங்கே விளக்கொளியில் வீடுகளின் முற்றங்கள் மின்னின. கால்நடைகள் வந்தேறின. கோழிகள் அடங்கின. பெண்கள் சேலை திருத்தி முல்லை மலர்ச்சரம் சூடி வாசலில் விளக்கேற்றி ரம்யமான சூழல் அமைத்தனர். விழிகள் வாசலிலும் சாலையிலும் வைத்தவண்ணம் காத்திருந்தனர். காத்தலால் வளரும் காதல் மயக்கம் அவ்வப்பொழுது காட்டிலிருந்து வீசும் முல்லை மலர் வாசம் சொரிந்த காற்றால் மிகுதியானது.
தலைவன் இன்னும் வந்திருக்கவில்லை. காடு கடுமையானது. இரவு நெருங்க நெருங்க காடு வேறு ஒரு பரிமாணம் எடுக்கும் விந்தையான ஒருமை. ஒருமை தான். அது ஒரு கூட்டுயிர். ஒன்றும் ஒன்றும் இணைந்த ஒன்று. அதனூடே நடந்து சென்று ஊரை அடைவதற்கு அந்த ஒன்றோடு ஒன்றாய் ஆகிவிட்ட உயிர்களுக்கு சாத்தியமான செயல். தலைவன் நடந்து கொண்டிருந்தான். தோளில் தொங்கவிட்ட மூங்கிலால் வேயப்பட்ட பையில் கனிகளும் தேன்கூடும் கிழங்கு வகைகளும் நிறைந்திருந்தன. பலா மரங்களில் கைக்கெட்டும் உயரத்தில் பலாப்பழங்கள்
இருந்தும் அதனை மற்றொரு நாளைக்கு விட்டுவைத்து நடந்தான். மற்றொரு நாளைக்கோ மற்றொரு உயிருக்கோ. தன் சிறார்களின் விளையாட்டு களைப்பை தன் ஒரு அணைப்பில் சரி செய்யும் வலிமையான தோள் கொண்ட அத்தலைவன், அவர்களின் ஆவலான எதிர்பார்ப்பை விரைவில் தனித்திட சற்றே விரைந்து நடந்தான்.
ஈர வாசம் கலந்த முல்லை மலரின் நறுமணமும் கால் விரல்களின் இடுக்கில் புகுந்து கொண்ட செம்மண் சேரும் ஆங்காங்கே இலைகள் தெறிக்கும் மழையின் மீதியும் அவனை காட்டுடன் இரண்டறக்கலந்தது. தூரத்தில் ஊர் தென்பட்டது. மினுக் மினுக் என்று அந்த மாலை விளக்கொளி அவனுக்கு அறைகூவல் விடுத்தது. அவ்விளக்கொளியில் தலைவியின் மனம் அழைப்பது புரிந்தது.
நீண்ட நெடும் வீதிகள், வழிப்போக்கர்கள், வாணிபம் செய்வோர், நடந்து பழகிவிட்ட சாலைகள், சிற்றூர் என்றாலும் குடிகளின் தேவை அனைத்தும் தீர்க்கும் அணைத்து அம்சங்களும் உள்ளடக்கிய ஒரு சிறு நாடாகவே இருந்தது. குளம் குட்டைகள் , சிற்றோடை, செம்மண் புலம், சிறு குன்றுகள், தூரத்தே மாமலை, இன்னும் சற்றே தொலைவில் காட்டாறு, என்ன இல்லை அங்கே. இயற்கை தன் கற்பனைத்திறனை வாரிதெறித்திருந்தாள். வாழ வைத்திருந்தாள்.
வந்தேறினான் தலைவன். தெரிந்த முகங்கள் வீதியில் விசாரித்தனர். ஒரு வித நிம்மதி பெருமூச்சு நெஞ்சை நிறைத்தது. வந்தது வீடு. முறுநகையுடன் தலைவி காத்திருந்தாள். கால சிறு துளியின் அந்த நிமிடம், உறைந்து நின்றது. சிறு பிரிவு தான். என்றாலும் இலக்கணத்தில் அடங்காத வேற்றுமை உருபால் இணையப்பட்டதால், அதன் பரிமாணம் மிகப்பெரியது அவர்களுக்கு. சிறார்கள் ஓடோடி வந்து அணைத்து கொண்டனர். பைகளில் தேடினர். எடுத்து கொண்டு ஓடினர். பகிர்ந்து கொண்டனர். சண்டை இட்டனர். மெதுவாக இரவு போர்த்தியது. ஊர் அடங்கிற்று. கால்நடைகள் அடைந்தன. காற்று மட்டும் அடங்கவில்லை. மெல்லிய முல்லை வாசக்காற்று. இல்லிருந்து இருந்து காத்திருந்து காலத்துளிகளை எண்ணியும் எண்ணியும் கடந்து இறுதியில் சேர்ந்தனர் அவர்கள். நேர்த்தியாக வடித்தெடுத்த மாலவன் கோவில் ஊர் நடுவே கம்பீரமாக நின்று குளிர்ந்த நிலவொளியில் இன்னும் சற்றே குளிர்ந்தது.
பொழுது புலரும் , பூச்சிகள் கிளறும், கால்நடைகள் மேயச்செல்லும், புள்ளினங்கள் படபடக்கும், அதனூடே மானுடம் தழைக்கும். நேயம் வளரும்.
முல்லை முற்றும். இல்லிருத்தல் முல்லை என்பார்கள். ஆயர், திருமால், காடு ஆகிய உரிப்பொருட்களை தொடர்பு படுத்தி எழுதி உள்ளேன். படித்தமைக்கு நன்றி. பகிரவும். கருத்துக்களை பதிவிடவும். வணக்கம்.